உறவுக்கு அப்பால் தாய் தந்தை

Share this article:தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், இறைவா நீ என் மீதும் என்பெற்றோர் மீதும் புரிந்த அருள் கொடைகளுக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல செயல்களைச் செய்யவும் எனக்கு அருள்பாலிப்பாயாக! என்னுடைய சந்ததியையும் நல்லோர்களாகச் சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (அல்குர்ஆன் 46:15)

வயோதிகப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில் இறைவனின் திருப்தி அடங்கியிருக்கிறது என்ற உண்மையையும் இத்திருவசனம் உணர்த்துகின்றது, தங்களிடம் பரிவும் கனிவும் காட்டுகின்ற சந்ததிகளையுடைய பெற்றோருக்கு, வயோதிகம் என்பது ஒரு சுமையன்று. வாழ்வின் பல்வேறு நிலைகளுள் அதுவும் இயல்பான ஒரு நிலையேயாகும்.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன?

வயோதிகம் இறை விதிப்படி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு இயல்பான நிலை என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். வயோதிகம் என்றாலே அது வேதனை மிக்கதுதான் என்பது போன்ற ஒரு மிரட்சியை இன்றைய செய்தித்தாள்கள், இதழ்கள், டி.வி. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியன பூதாகரமாகச் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

ஓய்வுபெறுதல், முதுமையடைதல் போன்றவற்றைத் தாங்கமுடியாத துன்பம் தரும் பிரச்சனைகளாக, இந்த மீடியாக்கள் நீட்டி முழக்கி விஸ்தரிக்கின்றன, குடும்பத்தலைவர் ஒருவர் பணிஓய்வு பெறுதலை அதிர்ச்சிக்குரிய சம்பவமாக இவை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. குடும்பத்து மன நிலையிலும் சமுதாயத்து மன அமைப்பிலும் இந்த மீடியாக்களின் தாக்கம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

பணியிலிருந்து ஓய்வுபெறுவது என்பது ஒருவர் கடந்த காலங்களில் ஆற்றிய அரும்பெரும் உழைப்பின் பலாபலன்களை ஓய்வுடன் நிம்மதியாக இருந்து அனுபவிப்பதற்குரிய காலமாகும் என்பதைக் குடும்பத்தினரும் சமுதாயமும் நினைத்துப் பார்ப்பதில்லை.

எந்த விதமான பிக்கல் பிடுங்கலுமின்றி, குதூகலமாகக் குடும்பத்துடன் முழு நேரத்தையும் கழிப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற அற்புதமான காலம் முதுமைப் பருவமாகும். குடும்பப் பாரங்களையெல்லாம் இளந்தோள்களின் மீது சுமத்திவிட்டு, முதியவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, பிறரோடு ஒத்திசைந்து போகிறவர்களாகவும், நல்லிணக்கமாக நடந்து கொள்பவர்களாகவும் ஆகிவிடுதல் வேண்டும். இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலும்.

ஓய்வு பெற்ற முதியோர் சிலர் ஒதுங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். சிலர் தங்களுடைய ஆக்கபூர்வமான அனுபவங்களைக் கொண்டு பொதுக்காரியங் களில் தங்களை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு, சமூக நலப்பணிகளில் அக்கறை காட்டுகின்றனர்.

குறைந்த பட்சம், பேரக்குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய்விடுதல், திருக்குர்ஆனையும் பள்ளிப்பாடங்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல், வீட்டுத் தேவைகளுக்காக மார்க்கெட் போய் வருதல் போன்ற சின்னச்சின்ன உதவிகளைச் செய்வதன் மூலம் முதியவர்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வழியில் செலவிட முடியும். அதே வேளையில் குடும்பத்தினரின் மன நிறைவையும் ஈட்டிக் கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட உதவி ஒத்தாசைகளைச் செய்ய இயலாத நிலையிலுள்ள வயோதிகர்களிடம் குடும்பத்தினர் பரிவோடு நடந்து கொள்ளுதல் வேண்டும். முதியவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது சிறிது பொருளாதாரப் பாதுகாப்பும், அன்பு பாராட்டும் குடும்பத்தினரும், சற்று பேச்சுத்துணையுமே ஆகும். இவற்றைக் குடும்பச் சூழ்நிலையில் செய்து கொடுத்து விட்டால் அதுவே அவர்களுக்குப் பெரும் பயனளிப்பதாக இருக்கும்.

குடும்ப விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக வயோதிகப் பெற்றோர்களின் அறிவுரையையும் அனுபவ வழி காட்டுதல்களையும் நாடுதல் வேண்டும். இல்லையேல் தாம் புறக்கணிக்கப் படுவதாகக் கருதி அவர்கள் மனம் புழுங்குவர்.

முதியோரைப் புறக்கணித்தல், கீழ்த்தரமாக நடத்துதல், அவர்களிடம் கொடுரமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களால் அவர்களுடைய வாழ்வுமட்டுமன்றி, முழுக்குடும்ப அமைதியுமே நிலை குலைகிறது.

பெற்றோரைப் பார்த்து சீ’ என்று கூடக் கூறலாகாது என்கிறது திருமறை குர்ஆன்.இப்படியிருக்க அவர்களைத் திட்டுவது என்பது இறைவனை அஞ்சி ஒழுகுபவர் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு செயலாகும். பெற்றோரை நாம் திட்டாமல் இருந்தால் மட்டும் போதுமா? பிறரிடமிருந்து பெற்றோருக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்காமலும் இருத்தல் வேண்டும். இது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் நல்கியுள்ள அறிவுரையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவங்களில் உள்ளதாகும் என்று கூறினார்கள். அப்போது (நபித்தோழர்கள்)”, அல்லாஹ்வின் தூதரே! எந்த மனிதராவது தனது பெற்றோரைத் திட்டுவாரா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம் ஒருவர் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தந்தையைத் திட்டுகிறார். ஒருவர் இன்னொருவரின் தாயைத் திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தாயைத் திட்டுகிறார்” என்று விளக்க மளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

முதியோருக்கும் இளையோருக்குமிடையே உள்ள உறவுகளாயினும் சரி; கணவன், மனைவி, மக்கள், உறவினர் முதலியோருக்கிடையே உள்ள உறவு நிலைகளாயினும் சரி; இங்கெல்லாம் தேவையற்ற உரசல்களும் விரிசல்களும் எதனால் ஏற்படுகின்றன? இந்த இடத்தில் மனிதனுடைய நாவு ஆற்றுகின்ற பங்குபணி மிக மிக முக்கியமானதாகும்.

குடும்பத்தில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள், பிணக்குகளுக்குப் பல்வேறு காரணங்களிருப்பினும், நாவை அத்துமீறிப் பயன்படுத்துதலே, பல நேரங்களில் வேண்டாத விபரீதங்களைத் தோற்றுவித்து விடுகின்றது.

முரட்டுத்தனமாகப் பேசுதல், இடைமறித்துப் பேசுதல், இழிவாகவும் ஏளனமாகவும் பேசுதல், சிறுமைப்படுத்திப் பேசுதல், தற்பெருமை பாராட்டுதல் போன்ற நாவின் திருவிளையாடல்களால் குடும்ப அமைப்பிலும் கூட்டு அமைப்பிலும் பெருஞ் சீரழிவுகள் ஏற்பட்டு விடுகின்றன.

ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதலும், அவதூறுகளை வாரியிறைத்தலும், தனி ஒருவரின் பண்பு நலன்களையும், இல்லம் என்னும் அன்பு மாளிகையையும் தூள் தூளாக உடைத்துச் சிதைத்து விடுகின்றன. குடும்பத்திலுள்ள அத்துணை பேரும் ஒரேமாதிரி எண்ணுவதில்லை, செயல்படுவ தில்லை. ஒவ்வொருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே.

கணவன் மனைவிக்கிடையேயும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும் உடன் பிறந்தவர்களுக்கு மத்தியிலும் கருத்து மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். குடும்ப அமைப்புக்குள்ளேயே இப்படிப்பட்ட வேறுபாடுகள் நிலவும்போது சமுதாய அமைப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இக்கருத்து மாறுபாடுகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ளுவதன் வாயிலாகத் தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நல்லெண்ணம் கொள்ளுதல், நட்புக்கரம் நீட்டுதல், அமைதியான நட்புச் சூழ்நிலையில் உரையாடுதல், ஆகியவற்றால் மிகக் கடுமையான சிக்கல்களுக்கும் எளிதில் தீர்வு காண இயலும்.

இதை விடுத்து குடும்பத்துக்குள்ளே ஒருவர் மீது ஒருவர் தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தங்களுக்கிடையே முகம் கொடுத்துப் பேசாமல் ஒருவரை ஒருவர் பழித்துப் பேசிப் பகைமை பாராட்டிக் கொண்டிருப்பதால் குடும்ப அமைப்பின் அடித்தளமே செல்லரிக்கத் தொடங்கிவிடும்.

எனவே கடுஞ்சொற்களின் அழிவுச் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. குடும்ப அமைப்பையும் சமுதாய அமைப்பையும் வெடித்துச் சிதைத்துவிடும் அணுகுண்டு போன்றவை இவை எனலாம்.

குடும்ப அமைப்பில் ஒருவரின் கற்பு நெறிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவம் நாவடக்கத்திற்கும் இருக்கிறது. கற்பு நெறி பிறழ்ந்தவர்கள் சமுதாய மதிப்பீட்டில் எந்த இடத்தைப் பெறுகிறார்களோ, அது போன்ற இடத்தைத்தான் நாகாக்கத் தவறியவர்களும் பெறுவார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று இதனை நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகின்றது.

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் சரியாகப் பயன்படுத்தப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்குச் சொர்க்கத்திற்கு நான் பொறுப் பேற்று கொள்கின்றேன் என்பது நபி மொழியாகும். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

தொடைகளுக்கிடையில் உள்ளதைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து இறைவனை அஞ்சிக் கற்பொழுக்கத்துடன் வாழ்பவர்களை மிகுதியாகக் காண்கிறோம். ஆனால் இப்படிப்பட்டவர்களுள் பெரும்பான்மையினர் தாடைகளுக் கிடையே உள்ளதைப் பேணுவதில் தடம் புரண்டு போய் விடுகின்ற காட்சியைக் குடும்பந்தோறும் கண்டு வருகின்றோம்.

மனிதர்கள் போகிற போக்கில் நரம்பில்லாத நாக்கைக் கொண்டு லேசாகப் பேசிக் சென்று விடுகிறார்கள். ஆனால் இதன் விளைவாகக் குடும்பத்திற்குள்ளேயும் சமுதாயத்திற்குள்ளேயும் எவ்வளவு பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. மறுமையின் சொர்க்கப் பேற்றிற்கே இது தடையாக அமைந்துவிடும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொண்டு காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

வயோதிகமடைந்த பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்துத் திருமறை குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவான வழிகாட்டுதல்களை நல்கியுள்ளன. இவை மட்டுமின்றி, பெற்றோர் காலமான பின்னர், பிள்ளைகள் அவர்களுக்கு நிறைவேற்றிட வேண்டியன யாவை என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இறைத்தூதர் அவர்களே! பெற்றோர் இறந்து விட்ட பிறகு, நான் ஆற்றவேண்டிய உதவிகள் (பிர்ரு) எதேனும் உண்டா? என்று பனூஸலி மா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்!

1. பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்.

2. அல்லாஹ்விடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருதல்.

3. அவர்கள் முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்.

4. அவர்களின் உறவினர்களுக்கு உதவிபுரிதல்

5. அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துதல் ஆகியவையாகும் என விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: உஸைது ஸாயிதீ (ரலி) நூல்: அபூதா¥த், இப்னுமாஜா

ஆகவே பெற்றோருக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் பெற்றோரின் மரணத்தோடு முடிந்து விடுவன அல்ல. பெற்றோர் காலமான பின்னரும் அவை தொடர்கின்றன.

பெற்றோருடைய ஜனாஸாவுக்கு யார் யாரெல்லாமோ பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னுரிமை பெற்ற பிள்ளைகள் ஜனாஸா தொழுகை யில் கலந்து கொள்ளாமல் தூரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது போன்ற வேதனைக்குரிய காட்சிகளை நாம் பல இடங்களில் கண்டு வருகிறோம். இந்தப் போக்கினைப் பிள்ளைகள் நீக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

பெற்றோருக்குப் பாவமன்னிப்புக் கோருவதற்காகக் கூலிக்கு ஆள் பிடித்து வந்து கத்தம் பாத்திஹா முதலியவற்றை அரங்கேற்றி, தூய இஸ்லாத்தின் வழி காட்டுதல்களிலிருந்து விலகிப் போகின்றவர்களைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், வாய்ப்பு கிடைக்கும் போதும் பெற்றோருக்காகப் பிள்ளைகள் மனமுவந்து இறைவனிடம் கையேந்தக் கடமைப்பட்டுள்ளனர். அந்தப் பிரார்த்தனையே உயிரோட்ட முடையதாகும்.

சொத்து சுகங்களுக்கு அதிபதியான தந்தை அல்லது தாய் மரணமடைந்து விட்டால், பல குடும்பங்களில் சொத்துப் பங்கீடு காரணமாகப் பெரும் சண்டை சச்சரவுகள் ஏற்படக் காண்கிறோம். அண்ணன் தம்பிகளே ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டும்; கோர்ட்டு, கேசு என்று எதிரிகள் போல வழக்காடிக் கொண்டும்; நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்து போவதைக் காண்கிறோம்.

ஜனாஸாவுக்காகச் செய்யப்படும் பல்வேறு பிரார்த்தனைகளுள் இறைவா (இறந்து விட்ட) அவருக்குப் பிறகு எங்களை வழிதவறச் செய்துவிடாதே, எங்களைக் குழப்பத்தில் ஆக்கிவிடாதே!” என்று ஒரு இறைஞ்சுதலும் இடம் பெறுகின்றது. இதனை நம்மில் பலர் உணரத் தவறி விடுகின்றனர்.

பெற்றோர் உயிருடனிருக்கும்போது முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன் படிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

மரணசாஸனத்தைக் கேட்டபின்னர், எவரேனும் ஒருவர் அதைமாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 2:181

எனவே இவ்விஷயத்தில் குடும்பத்தினர் கவனமாக இருத்தல் வேண்டும். அதே வேளையில் இறந்து போனவர் வேண்டுமென்றே பாரபட்சமாக மரணசாஸனம் செய்திருப்பாரானால், அதனை மாற்றிவிட்டு, நியாயமான முறையில் சீர்செய்திடவும், குடும்பத்தின் வாரிசுதாரர் அனைவரும் சமாதானமாகும் விதத்தில் அதை நேர்படுத்திடவும் வேண்டும் என்பதையும் திருமறைத் தெளிவுபடுத்தியுள்ளது.

மரணசாஸனம் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தபட்ட வர்களிடையே) சமாதானம் செய்து (அந்த மரண சாஸனத்தை) சீர்செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப் பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான். அல் குர்ஆன் 2:182

குடும்பங்களில் பகையும் பிணக்கும் ஏற்படுவதற்கு சொத்து சுகங்கள் ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றன. இதனைக் குடும்பத்தினர் எப்படி நல்லிணக்கமான முறையில் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கு இஸ்லாம் மிக அருமையான வாரிசுரிமைச் சட்டங்களை வரையறுத்துக் கூறியுள்ளது. அதனை இஸ்லாமியக் குடும்பங்கள் இறைவனுக்குப் பயந்து இனிது பேணுவார்களாயின், அதன் காரணமாக எழுகின்ற மனஸ்தாபங்கள் சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட்டு சாந்தி பெறவியலும்.

பெற்றோரின் உறவினர்களோடு நன்முறையில் நடந்து கொள்ளுதலும் பெற்றோருக்குப் புரிகின்ற மரியாதையைச் சார்ந்ததாகும் உறவினர்கள் மற்றும் சுற்றத்தினரைத் தழுவி வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதைத் திருமறை குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்திப் பேசியுள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை புரியுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள்,பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகிறான். நீங்கள் நினைவு கூர்ந்துச் சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். அல்குர்ஆன் 16:90

(அல்லாஹ்வாகிய) அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களை (துண்டித்து விடுவதிலிருந்தும்) நீங்கள் அல்லாஹ்விற்காகப் பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1

உறவைத் துண்டிப்பது மிகப்பெரும் தவறாகும் என்பதைத் திருக் குர் ஆன் கூறி நிற்கிறது. உறவைப் பேணுவதுவே நீதியான நன்மையான செயலாகின்றது. மானக் கேடான அநீதியான செயல்களுள் ஒன்றாக உறவை மறுப்பதும் அமைந்து விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் அல்லாஹ்வைப் பெரிதும் அஞ்சி, உறவினர்களுடன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் தலையாய கடமையாகும்.

கருவறையே! உன்னோடு நல்லுறவு பேணுகின்றவருடன் நானும் நல்லுறவு பேணுவேன், உன்னைத் துண்டிப்பவருடன் நானும் துண்டித்து விடுவேன் என அல்லாஹ் கூறினான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். நூல்: புகாரி

யார் யார் உறவினர்களுடன் நேசம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் தான் இறைவனும் நேசம் பாராட்டுகிறான். யார் யார் குடும்ப உறவுகளைத் துண்டித்து விடுகிறார்களோ, அத்தயை அன்பற்றவர்களுடன் இறைவனும் அன்பு பாராட்டுவ தில்லை. மாறாக அவர்களுடன் உள்ள உறவை இறைவன் துண்டித்து விடுகிறான் என்ற ஒரு முக்கியச் செய்தியை இந்நபிமொழி நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இதன் முக்கியத்துவத்தை நம்மவர் உணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். தொட்டதற்கும் பிடித்ததற்கும் உறவுக்காரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, பகைபாராட்டுவதால் இறைநேசத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றனர். இதைவிட பெரிய நஷ்டம் ஒரு முஸ்லிமுக்கு வேறு என்னதான் இருக்க முடியும்?

குடும்ப உறவைத் துண்டிப்பதன் வாயிலாக இறைநேசதத்திலிருந்து துண்டிக்கப்பட்டவன் நரகம் புகுவது திண்ணம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (குடும்ப உறவை) துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

எனவே குடும்ப உறவை எவர் முறிக்கிறாரோ அவர் இறைவனுடனுள்ள உறவையே முறித்தவராவார். இத்தகையவர் சுவர்க்கப் பேற்றுக்கே அருகதையற்றுப் போகிறார்.நம்முடைய சொந்த பந்தங்கள் நம்முடன் உறவை முறித்துக் கொண்டாலுங் கூட, நாம் அர்களுடன் உறவை முறித்து விடுதல் கூடாது. இதனை எடுத்துரைக்கும் விதமாக நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று அமைந்துள்ளது.

ஒருவர் உறவு பாராட்டுகிறார் என்பதற்காகப் பிரதி உறவு பாராட்டுபவர் உறவை நேசித்தவர் ஆகார். மாறாக, தன்னுடன் உறவை முறித்துக் கொண்டவர்களுடனும்தான் உறவு பாராட்டி, அவர்களுடன் நன் முறையில் நடப்பவரே உறவை நேசித்தவராவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: புகாரி

இதனை நமக்கு எடுத்துரைத்த நபி (ஸல்) அவர்களே இந்தத் திருமொழிக்கு முன் மாதிரியாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையார் அபூதாலிபைத் தவிர அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் நபிகளாருக்குப் பாதுகாப்பு அளித்திடவில்லை. அபூதாலிபின் குடும்பத்தினர் தனக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற காரணத் துக்காக நபி(ஸல்) அவர்கள் அக்குடும்பத்தினருடனுள்ள உறவைத் துண்டித்து விட வில்லை. மாறாக அக்குடும்பதாருடன் தானே வலியச் சென்று நல்லுறவை நிலை நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மனமுவந்து நிறை வேற்றினார்கள்.

நபிகளாரின் இத்தகைய நன்னடத்தையை அம்ரு பின்ஆஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரகசியமாக அன்று; பகிரங்கமாகவே சொன்னதை நான் கேட்டேன்.

எனது தந்தை (அபூதாலிப்) குடும்பத்தினர் எனது அவ்லியாவாக’ (பாதுகாப்பாளாராக) இல்லை.

நிச்சயமாக அல்லாஹ்வே நம்பிக்கை கொண்ட நல்லோரின் வலியாக’ (பாதுகாவலனாக) இருக்கிறான்.

ஆயினும் (அக்குடும்பத்தினராகிய) அவர்கள் எனது உறவினர்களே! நான் அவர்களுடன் நல்லுறவு பேணி அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றுகின்றேன். நூல்: புகாரி.

குடும்ப உறவுகளும் சொந்த பந்தங்களும் சிதைந்து சின்னா பின்னப்பட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், இது மாதிரியான அழகிய நடை முறைகளை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

Islamic Articles

Leave a Reply

Be the First to Comment!

Please refrain from nicknames or comments of a racist, sexist, personal, vulgar or derogatory nature, or you may risk being blocked from commenting in our website. We encourage commentators to use their real names as their username. As comments are moderated, they may not appear immediately or even on the same day you posted them. We also reserve the right to delete off-topic comments. If you need to contact our Jamath EXCO to share any ideas or issues please use our contact us form.
Notify of

wpDiscuz