செவ்வாய், 13 ஜூலை 2010 23:48
அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.
இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.
உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.
நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.
“என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் டைசன்.
“இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை” என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.
மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.
“ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்” என்றார் ஷெஹஜாத்.
“மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது” என்கிறார் ஷெஹஜாத்.
மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிறார்த்திப்போம்.
Leave a Reply
Be the First to Comment!
You must be logged in to post a comment.
You must be logged in to post a comment.