தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.
தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டுபதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் தோன்றி பின் இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142 – 1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.
கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார்கள். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது. முகம்மது நபி அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737)ல் காயலில் வந்து குடியேறினார். இச் சமயத்தில் எகிப்தை முகம்மதிப்னு கலாவூன் ஆட்சி செய்திருந்தார். இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினர். சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் பரம்பரையினர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்[5]..
சுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில் காயல்பட்டிணம் அதன் தலைநகரமாக விளங்கியது. இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார். கலிபா உமர் அவர்கள் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்து சேர்ந்தது. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டிணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார்கள். இக் குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.
கி.பி. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் கலிபா அபூபக்கர் அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் எகிப்தில் மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடயங்களையும் யாரும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின்இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொது மக்கள் வாழ்ந்து தான் வந்தார்கள்.
Leave a Reply
Be the First to Comment!
You must be logged in to post a comment.
You must be logged in to post a comment.