Kuala Lumpur, Malaysia

உம்மத்தின் வழிமுறை

உம்மத்தின் வழிமுறை


  July 27,2010 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும்.
மனதைத் தூய்மைப்படுத்தி, பண்படுத்தக்கூடியது ஈமான்தான் என்று நம்புவதைப் போல அதை மாசுபடுத்தி பாழ்படுத்தக்கூடியது நிராகரிப்பை மேற்கொள்வதும் பாவம் செய்வதும்தான் எனவும் நம்ப வேண்டும்.
இதனால்தான் முஸ்லிம் எப்போதும் தன் மனதைத் தூய்மைப்படுத்துவதிலும், பண்படுத்துவதிலும் ஈடுபடுவதோடு, நன்மை செய்வதற்கும் தீமையிலிருந்து விலகுவதற்கும் இராப்பகலாக அதனோடு போராடவும் வேண்டும். மேலும் ஒவ்வொரு நேரமும் சுய பரிசோதனை செய்து நற்செயல்கள் புரிவதற்கு மனதைத் தூண்ட வேண்டும். அதுபோல தீமைகளை விட்டும் மனதைத் திருப்பி, வழிபாட்டின் பால் செலுத்த வேண்டும். இதற்காக பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
1 . அதாவது அனைத்துப் பாவங்களை விட்டும் தவறுகளை விட்டும் விலகி, நடந்த தவறுகளுக்காக வருந்தி இனிமேல் மீண்டும் அதுபோன்ற பாவங்களைச் செய்யாமலிருக்க உறுதிகொள்ள வேண்டும்.

2 . அதாவது வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவன் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருகின்றான் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தனது இரகசியங்களையும் பரகசியங்களையும் அறிந்து கொள்கின்றான் என்பதையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும். இதனால் அவனது உள்ளம் இறைவனின் கண்காணிப்பை உறுதி கொள்ளக்கூடியதாக, அவனை நினைவு கூறும்போது ஒரு பிரியத்தை உணரக்கூடியதாக, அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது ஒரு சுகத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக, அவனை அன்றி  ஏனைய அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அவன் பக்கமே திரும்பக்கூடியதாக ஆகிவிடுகின்றது.

3 . முஸ்லிம் மறுமையில் தனக்கு நற்பேறு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் அங்கு கிடைக்கும் நற்கூலிக்கும் இறைவனின் திருப்பொருத்ததிற்கும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவும் இவ்வுலகில்  இரவு பகலாகச் செயல்படும்போது ஒரு வியாபாரியைப் போல செயல்பட வேண்டும்.

அதாவது தன் மீதுள்ள கடமையான வணக்கங்களை மூலதனமாகவும் நஃபிலான வணக்கங்களை மூலதனத்திற்கு மேல் கிடைக்கின்ற இலாபங்களாகவும்  தவறுகளையும் பாவங்களையும் நஷ்டங்களாகவும் கருதி செயல்பட வேண்டும். பிறகு அவ்வப்போது தனியாக அமர்ந்து இன்றைய தினம் தாம் என்ன செய்தோம் என்று சுய பிரிசோதனை செய்து பார்க்க வேண்டும்

கடமைகளில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் தன்னைத்தானே பழித்துக் கொண்டு உடனடியாக அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். அக்குறை, களாச் செய்யப்படக் கூடியதாக இருந்தால் அதைக் களாச்செய்து விட வேண்டும். களாச் செய்யப்படக் கூடியதாக இல்லையென்றால் நஃபில்களை அதிகமாகச் செய்து சரிசெய்து விட வேண்டும். நஃபில்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் திரும்பவும் அந்த நஃபில்கலைச் செய்து சரிசெய்து விட வேண்டும். ஹராமான காரியங்களைச் செய்து நஷ்டம் ஏற்பட்டிந்தால் அதற்காக வருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி அவனிடமே திரும்பிவிட வேண்டும். அத்துடன் தான் செய்த தீமைக்குப் பொருத்தமான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும்.

4  . தன்னுடைய விரோதிகளிலேயே கொடிய விரோதி தனது மனம்தான் என்பதை முஸ்லிம் புரிந்துகொள்ள வேண்டும். இயல்பாகவே அது நன்மையை வெறுத்து தீமையை விரும்பக்கூடியதாகவும் தீயவற்றை அதிகம் தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் மனம் எப்போதும் தனக்கு ஓய்வையும் சுகத்தையுமே விரும்பும். இச்சைகளின் மீதே மோகம் கொள்ளும். அவற்றில் தனக்குக் கெடுதியிருந்தாலும் சரியே!

இதை ஒரு முஸ்லிம் புரிந்து கொண்ட பிறகு நன்மைகளைச் செய்வதற்கும் தீமைகளை விட்டு விலகுவதற்கும் தன் மனதோடு போராட வேண்டும்.

இதுதான் நல்லோர்களின் வழிமுறையாகும். முஃமின்கள் மற்றும் வாய்மையாளர்களின் வழிமுறையும் இதுவே.

“எவர்கள் நமக்காக போரடுகின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். திண்ணமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கின்றான். (29:69)”

அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலி வழங்க பிறாத்திப்போம்.

ஆமீன் ! ஆமீன் ! யாரப்பில் ஆலமீன்.

வஸ்ஸலாம்.


 

Newsletter Sign Up

For Latest Updates